எம்மைப் பற்றி

ஆலய வரலாறு:

சிங்கப்பூரின் “லிட்டில் இந்தியா” விளிம்பிலுள்ள ஓபீர் சாலையில், பாண்டிச்சேரியிலிருந்து வந்த இந்திய சமூகத்தின் உறுப்பினர்களால் சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டு ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அருட்தந்தை ஜோக்கிம் அலெக்ஸாண்டர் மரி மெனுவ்ரிர் என்ற ஒரு பிரஞ்சு குருவானவர் தமிழ் பேசும் இந்திய மக்களுக்குத் தமிழில் திருப்பலியாற்ற ஒரு ஆலயத்தின் தேவையை உணர்ந்தார். 1885ம் ஆண்டில், ஆலயத்தைக் கட்ட அரசாங்கம் ஒரு நிலத்தை வழங்கியது. 1886ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி மேதகு ஆயர் கஸ்னியர் ஆலயக் கட்டிடத்தின் அடிக்கல்லை நாட்டி, 1888ம் ஆண்டின் மே மாதத்தில் ஆலயமானது அதிகாரப்பூர்வமாக அர்ப்பணிக்கப்பட்டது. ஒரு கால்வாயின் அருகில் அமைந்துள்ள இந்த ஆலயத் தளம் முதலில் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது. 19ம் நூற்றாண்டு முதல் சிராங்கூன் சாலைக்கு அருகிலுள்ள இப்பகுதி, இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதியாகவும், உள்ளூர் கத்தோலிக்கர்களுக்கு வசதியாகவும் இருந்ததால், ஆலயம் கட்ட இதுவே சிறந்த இடமாகக் கருதப்பட்டது.

முதலில் அலெக்ஸாண்டிரே இஸம்பெர்ட் அடித்தளத் திட்டத்தையும், இரும்புத் தூண்களையும், உலோக வடிவமைப்பையும் வழங்குவதில் பொறுப்பாளராக இருந்தார். ஆனால் இறுதியில் உள்ளூர் நிறுவனமான ஸ்வான் & லெர்மிட் மூலமாகத் ஆலயம் கட்டும் திட்டம் முன்மொழியப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் மேற்பார்வையிடப்பட்டு, 1888ம் ஆண்டு மே மாதம் ஆலயப் பணிகள் நிறைவடைந்தது. அதே சமயத்தில் ஆலயத்தின் அருகில், அருட்தந்தை மெனுவ்ரிர், ஆளுநர் செர் ஃப்ரெடெரிக் வெல்ட் அவர்களிடமிருந்து கூடுதலாக ஒரு நிலத்தை வாங்கி இரண்டு மாடிக் கட்டிடத்தைக் கட்டி, அதன் மேல் தளத்தில் குருக்கள் தங்கவும், கீழ் தளத்தில் பள்ளிக்கூடம் ஒன்றையும் அமைத்து வசதி ஏற்படுத்தினார். துரதிருஷ்டவசமாக, இரண்டாம் உலகப் போரின் போது, நகரப் பகுதி கடுமையான குண்டுவீச்சிற்கு உள்ளானதில், இந்த ஆலயத்தைக் காப்பாற்ற முடியவில்லை. ஆலய வளாகத்திற்குள் குண்டுகள் விழ, கட்டிடத்தின் மேல் தளம் இடிந்தது. ஆலயத்தின் சாளரக் கண்ணாடிகள் சிதறின. ஆலயக் கட்டிடத்திற்கு அதிகச் சேதமில்லை. போருக்குப் பின்னர், கட்டிடத்தின் கட்டமைப்புப் பாதுகாப்பு காரணங்களுக்காக இரு மாடிக் கட்டிடம் இடிக்கப்பட்டது.

தூய லூர்து அன்னைப் பள்ளி சிங்கப்பூரின் ஆரம்ப காலப் பள்ளிகளில் ஒன்றாகும். 19ம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டில் ஆங்கிலத் தமிழ் பள்ளியாக செயல்பட்டது. 1888ம் ஆண்டில் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவின் போது, இத்தமிழ் பள்ளி அருட்தந்தை மெனுவ்ரிர் அவர்களால் திறக்கப்பட்டது. 1927ம் ஆண்டில், இந்தியப் பெண்களுக்கு மரத்தாலான ஒரு மாடிப் பள்ளிக் கட்டிடம் அருட்தந்தை லூயிஸ் பர்ஹோஃபர் அவர்களால் நிறுவப்பட்டது. பின்னர் அது, 1936 முதல் புனித குழந்தை இயேசு சகோதரிகளால் நடத்தப்பட்டது. 1962ம் ஆண்டில் அது, அருட்தந்தை ஆல்பர்ட் ஃபோர்டியரால் மூன்று மாடி கான்கிரீட் கட்டிடமாக மாற்றப்பட்டது.

1974ம் ஆண்டு முதல் இந்தியக் கத்தோலிக்க அந்தஸ்தைக் விட்டுவிட்டு, எல்லா இனத்தாரும் பங்கேற்கும் வகையில் அதிகாரப்பூர்வமாக இந்த ஆலயம் செயல்பட்டாலும், இன்று வரை இந்த ஆலயத்தில் தமிழ் பேசும் இந்தியர்களின் செல்வாக்கு வெளிப்படையாக இருந்து, திருப்பலிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடைபெற்று வருகிறது.

2000ம் ஆண்டில், ஆலய வளாகத்தில், கீழ் நிலையிலுள்ளவர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்த ஒரு புதிய மையம் அமைக்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த இல்லப் பணிப்பெண்கள் சமையல் திறன், செயலகத் திறன், மருத்துத் திறன் போன்றவற்றைப் பெற சுய உதவிக் குழுவினர் பயிற்சி அளித்தனர்.

14 ஜனவரி 2005ல் தூய லூர்து அன்னை ஆலயம் ஒரு தேசிய நினைவுச் சின்னமாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. 2009ம் ஆண்டில், தேசிய நினைவுச் சின்னங்கள் மறுசீரமைப்புத் திட்டத்தின் உதவியுடன் S$449,000 வழங்கப்பட்டு, ஆலயத்தின் கூரைப் பகுதியும் மற்ற ஒரு சிலப் பகுதிகளும் அவசரமாகப் பழுதுபார்க்கப்பட்டது.

ஆலயக் கட்டமைப்பு:

தூய லூர்து அன்னை ஆலயம், பிரான்சின் லூர்து  நகரிலுள்ள தேவாலயத்தின் மாதிரியைக் கொண்டு கட்டப்பட்டது. இதன் கட்டமைப்பு, அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட பெரும் வளைவுகள், வார்ப்பு இரும்பிலான தூண்கள், சுவர் வேலைப்பாடுகள், பிரஞ்சு அடுக்கு வகை மரம் மற்றும் கண்ணாடிச் சாளரங்கள், இயற்கை நிற ஓட்டுக் கூரை போன்றவைகளைக் கொண்டுள்ளது.

பல சீரமைப்புப் பணிகள் இந்தத் ஆலயத்தில் நடைபெற்றுள்ளன. உதாரணமாக, 1958 மற்றும் 1959க்கு இடையில், இரண்டாம் உலகப் போரின் போது சேதமடைந்த நுணுக்க வேலைப்பாடு மிக்கக் கண்ணாடிச் சாளரங்கள், அருட்தந்தை ஃபோர்டியர் அவர்களின் பெரும் சீரமைப்புக்குப் பின் மீட்கப்பட்டன. இந்தச் சாளரங்கள் திருச்செபமாலையின் 15 மறைபொருள்களைச் சித்தரிக்கின்றன. மேலும் அவர் மின்னணு மணித் தொகுப்பை நிறுவி, பெருகி வரும் மக்கள் கூட்டத்திற்கு இடமளிக்க இரண்டாவது மாடியையும் கட்டியெழுப்பினார்.

இந்தத் ஆலயம் மேற்கு ஐரோப்பிய கோத்திக் (Gothic) கலையமைப்பைக் கொண்டிருந்தாலும் ஆலயத்தின் வேலைப்பாடுகளில் சில முரண்பாடுகள் உள்ளன. ஆலயத்தின் தலை வாயில் கதவுகள் கிடங்குகளில் உள்ள கதவுகள் போலவும், வெளிப்புறச் சுவர்கள் தாக்குத் தூண்கள் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் உட்புற நடுக்கூடம் பலிப்பீடத்தின் முடிவில் வட்டமாக நீண்டு செல்கிறது. ஆலயத்தின் நடுக்கூடம் உயர்ந்தோங்கி இருப்பதால் நல்ல இயற்க்கை வெளிச்சம் ஆலயத்தினுள் வருகிறது. வழக்கமாகப் பலிப்பீடத்திற்குப் பின்னால் நடுவில் இருக்கும் திவ்விய நற்கருணைப் பேழைக்குப் பதிலாகத் தூய லூர்து அன்னை காட்சியளித்த சிறிய அளவிலான கேபி உள்ளது. திவ்விய நற்கருணைப் பேழைப் பலிப்பீடத்தின் வலப்புறத்திலும், பாடுபட்ட இயேசுவின் உருவைத் தாங்கிய பெரிய சிலுவை பீடத்தின் இடப்புறச் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சில திருடர்கள் இந்தச் சிலுவையைத் திருட முயன்றபோது, ​​அதை அவர்களால் நகர்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் பின்புறத்தின் ஒரு மூலையில், அற்புதமான வார்ப்பு இரும்பிலான சுருண்ட படிக்கட்டுகள் இரண்டாம் தளத்திற்கு இட்டுச் செல்கின்றன. பாதுகாப்புக்கு காரணமாக இந்தப் படிக்கட்டுகள் தற்போது பயன்பாட்டில் இல்லை.

இந்த ஆலயத்தின் சாளரங்கள் நவீன அணுகுமுறைக்கும் நல்ல கலையமைப்புக்கும் சிறந்த முன்மாதிரியாகக் கருதப்படுகிறது. இந்தத் தூய லூர்து அன்னை ஆலயத்தை ஒரு தேசிய நினைவுச் சின்னமாக பாதுகாப்பதற்கு 2009ம் ஆண்டு சுமார் S$1.75 மில்லியன் மதிப்பிலான மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழையக் கட்டிடமாக இருப்பதால் இந்தத் ஆலயம் 2020ல் மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்படவிருக்கிறது. உங்கள் தாராள மனதை மீண்டும் எதிர்ப்பார்க்கிறோம். நன்றி.

இரண்டு குருக்கள், அருட்தந்தை மெனுவ்ரிர் மற்றும் அருட்தந்தை பர்ஹோஃபர் ஆகியோரின் சேவையை நினைவுகூறும் விதமாகத் ஆலயத்தில் இரண்டு பித்தளைத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அருட்தந்தை மெனுவ்ரிர் சிங்கப்பூர் முதல் மிஷனரியாக இங்கு இருந்தார். இங்குள்ள இந்தியக் கத்தோலிக்கர்களுக்காக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்குப் பின் வந்த அருட்தந்தை பர்ஹோஃபர், ஆலயத்தின் வளர்ச்சிக்காக இங்கு 34 ஆண்டுகள் மதிப்புமிக்க மறைப்பணியில் ஈடுபட்டிருந்தார்.