தூய லூர்து அன்னை ஆலயத் தமிழ் பக்கம்

திருப்பலி செபங்கள் – புதிய அமைப்பு முறை

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 10-04-2000 அன்று உரோமைத் திருப்பலி நூலின் திருத்தப்பட்ட மாதிரிப்படிவத்தை வெளியிட்டு, 2002ல் அவரவர் தாய்மொழியில் அது மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அதன்மூலம் கத்தோலிக்கத் திரு அவையின் இறைமக்கள் அனைவரும் திருவழிபாட்டின் உட்பொருளை நன்கு உணர்ந்து, அவரவர் வாழும் சூழலில் மொழி, பண்பாடு, ஆகியவற்றிற்கு ஏற்ப முழு ஈடுபாட்டோடு பங்குபெற்று, மீட்பைப் பெற திருப்பலி நூலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இவ்வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2008ம் ஆண்டு வெளியிட்ட உரோமைத் திருப்பலி நூலின் திருத்தப்பட்ட மூன்றாம் மாதிரிப் படிவத்தை தமிழாக்கம் செய்ய, தமிழக ஆயர் பேரவை முடிவு செய்தது. இதன்படி இந்தத் தழிழாக்கம் இந்திய இலத்தீன் ஆயர் பேரவையின் ஒப்புதலோடு உரோமைத் திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயத்தின் அனுமதியை மே 16, 2017ல் பெற்றது.

திருவழிபாட்டில் இறைமக்கள் முழுமையாகப் பொருளுள்ள விதத்தில் பங்கேற்க, திருவழிபாடு பற்றிய விளக்கத்தை மக்களுக்கு வழங்க இப்புதிய நூல் ஒரு வாய்ப்பாக அமைகிறது. எனவே, அனைவரும் இப்புதிய தமிழாக்கத்தைப் பயன்படுத்தி, திருப்பலியில் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பங்கேற்று, கிறிஸ்துவின் மனநிலை கொண்டு சான்று வாழ்வு வாழ உங்களை அழைக்கின்றோம்.

பிப்ரவரி 14, 2018 முதல் இப்புதிய உரோமைத் திருப்பலி நூலை மட்டுமே அனைவரும் பயன்படுத்தும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக ஆயர் பேரவையின் சுற்றுமடல்

திருப்பலி செபங்கள் – புதிய அமைப்பு முறை

செபமாலை – புதிய அமைப்பு முறை


தமிழில் சிலுவைப்பாதை

நமது ஆலயத்தில் தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்குத் தமிழில் சிலுவைப்பாதையும், அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெறும். உங்கள் தவக்கால அனுபவம் சிறப்படைய அனைவரும் கலந்து கொள்ளவும்.


இடைவிடா சகாய அன்னை நவநாள்

நமது ஆலயத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இரவு 8:30 மணிக்குத் தமிழில் இடைவிடா சகாய அன்னை நவநாளும், அதனைத் தொடர்ந்து திவ்விய நற்கருணை ஆசீரும் நடைபெறும். நமது அன்னையின் வழியாக இறையாசீர் பெற உங்களை அன்புடன் அழைக்கிறோம். நன்றி.


தமிழில் முழு இரவு செப வழிபாடு

நமது ஆலயத்தில் ஒவ்வொரு 2ம் சனிக்கிழமைகளிலும் (10-03-2018) இரவு 9:30 மணி முதல் மறுநாள் காலை 5:30 மணி வரை தமிழில் முழு இரவு செப வழிபாடு நடைபெறும். இரவு முழுதும் விழித்திருந்து, நாம் சுமக்கும் பாரங்களை கடவுளிடம் இறக்கி வைத்து, அவரைப் பற்றி மேலும் அறிந்து, அவரோடு உறவாட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.


மறையுறைத் தொடர் – இயேசு யார்?

தூய லூர்து அன்னை ஆலயத் திருவிழாவைத் தொடர்ந்து, “இயேசு யார்?” என்ற தலைப்பில் மறையுரைத் தொடர் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். புகழ் ஆராதனை, மறையுரை, செப வழிபாடு கொண்ட இந்நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைபெறும்.

மறையுரை ஆற்றுவோர்: அருட்திரு. மைக்கிள் சீத்தாராம், அருட்திரு. பவுல் இயோ, அருட்திரு. நித்திய சகாய ராஜ்

இதன் அடுத்தப் பகுதி வரும் 01-மார்ச்-2018 (வியாழன்) இரவு 7:45 மணிக்கு நமது பங்கு மண்டபத்தில் நடைபெறும்.
அனைவரும் இதில் கலந்து பயன் அடைய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.


இரு மொழி மறைக்கல்வி வகுப்புகள் 2018

வெகு விரைவில், இரு மொழி (தமிழ்/ஆங்கிலம்) மறைக்கல்வி வகுப்புகள் ஆரம்பமாகவிருக்கிறது. ஞாயிறு 9:30 மணித் தமிழ் திருப்பலி முடிந்தவுடன் சுமார் 45 நிமிடங்களுக்கு மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறும். நம் பிள்ளைகளுக்குப் புரியும் வண்ணம் தினசரிச் செபங்களும் பாடங்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கிச் சொல்லித்தரப்பட்டு, புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் பெற அவர்கள் தயார் செய்யப்படுவர். எங்களது இப்புதிய முயற்சியை இந்தியத் தமிழ் கத்தோலிக்கப் பெற்றொர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆதரவளிக்க உங்களை அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.

தன்னார்வ மறைக்கல்வி ஆசிரியைகள் தேவை

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர்களிடம் அதிக அக்கறையுடன் மறைக்கல்விப் பணியாற்ற ஆர்வம் கொண்ட பெண்கள் அருட்திரு. நித்திய சகாயராஜ் அவர்களைத் உடனே தொடர்பு கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.